உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்றார். காமென்வெல்த், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற இவர், உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதையடுத்து, முதல் சுற்றுப் போட்டியில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வீடனின் சோஃபி மேட்சனை எதிர்கொண்ட அவர், ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தினார். ஒரு இடத்தில் கூட சிறு தவறு செய்யாத வினேஷ் போகத் 13-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் அவர் நடப்பு சாம்பியன் மயு முகைடா (Mayu Mukaida) உடன் மோதினார். முன்னதாக, ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வினேஷ் போகத் மயு முகைடாவிடம் தோல்வி அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நடப்பு சாம்பியனின் ஆக்ரோஷமான ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிய வினேஷ் போகத் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இந்தத் தொடரில் அவர் தோல்வி அடைந்திருந்தாலும், ரீபேஜ் (Repage) முறையில் அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.