விளையாட்டு என்பது பெரும்பாலும் போட்டிகள் நிறைந்த ஒன்றாகவே இருக்கும். இந்த விளையாட்டில் எதிரணியில் இருப்பவர் தனது ரத்த பந்தமானாலும் அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதே சிந்தையாக இருக்கும்.
ஸ்போர்ட்மேன்ஷிப்
இருப்பினும் இந்த விளையாட்டு வீரர்களிடத்தில் ஸ்போர்ட்மேன்ஷிப் (விளையாட்டின் மனிதநேய நெறி) என்னும் ஒரு எண்ணம் மறைந்திருக்கும். சில சமயங்களில் எதிரணி வீரர் காயமடையும்போதும் தோல்வியால் துவண்டுபோகும் சமயத்திலும் அவருக்கு ஆறுதல் கூற வெளிப்படும் ஒரு உன்னத குணமே ஸ்போர்ட்மேன்ஷிப்.
அந்தவகையில் கத்தார் தலைநகர் தோஹாவில் உலக தடகளச் சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியது. காலிஃபா அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் அனைத்து வீரர்களும் எல்லையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்த வேளையில் ஒரு வீரருக்கு மட்டும் சக போட்டியாளரின் வலி கண்ணில் தென்பட்டது.
சக போட்டியாளரை தோளில் தாங்கிய வீரர்
ஆம்! இந்த ஓட்டத்தில் அனைவரும் எல்லையை நெருங்கிய சூழலில் அருபா நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் பஸ்பிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் நிலை தடுமாறினார். இதைக்கண்ட சகப் போட்டியாளரான கயினா பிசாகுவைச் சேர்ந்த பிரய்மா சன்கர் டபோ, போட்டியைப் பற்றி கவலை கொள்ளாமல் பஸ்பியை பிடித்துக்கொண்டார். பின்னர் அவரைத் தோளில் தாங்கியவாறு கடைசி 200 மீ தூரத்தைக் கடந்தார்.
இதைக்கண்ட மைதானத்திலிருந்த அனைவரும் அந்த இரண்டு வீரர்களையும் நோக்கி ஆரவாரம் செய்தனர். இந்தக் காணொலி சர்வதேச தடகள கூட்டமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இது கடந்த இரண்டு தினங்களாக இணையத்தில் பரவிவருகிறது.
மனிதநேயத்தில் மனங்களை வென்ற சன்கர் சன்கர் டபோ!
அந்தப் போட்டியில் எத்தியோப்பிய வீரர் செலிமான் பாரேகா முதலிடம் பிடித்தாலும் அனைவரின் மனதிலும் கடைசி இடம் பிடித்த பிரய்மா சன்கர் டபோ மனிதநேயத்தில் முதலிடம் பிடித்தார்.
மேலும் படிக்க: உலக தடகள சாம்பியன்ஷிப் - 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர்