ரஷ்யாவின் உதே நகரில் மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், 51 கிலோ எடைப் பிரிவில் ஆறுமுறை தங்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரிகோம் தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
#AIBAWomenWorldBoxingChampionship: அரையிறுதியில் மேரிகோம் தோல்வியடைவது இதுவே முதல்முறை! - மேரி கோம் சாதனைகள்
மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரிகோம் தோல்வி அடைந்தார்.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அவர், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை துருக்கியின் பஸனஸ் சகிரோக்லுவுடன் (Busenaz Cakiroglu) மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அவர் 1-4 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மேரிகோமின் தோல்வியை எதிர்த்து இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மேல்முறையீடு செய்திருந்தும் அது தோல்வியில்தான் முடிந்தது.
இதன்மூலம், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மேரிகோம் தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும். இதனால், தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேரிகோம் இறுதியில், வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்றார். இவர் இந்தத் தொடரில் தோல்வி அடைந்திருந்தாலும், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் அதிக பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற சாதனைப் படைத்துள்ளார். இந்தத் தொடரில் அவர் இதுவரை ஆறு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் எட்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.