மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து தொடர் ஜப்பான் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனா அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது.
இதில் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய சீனா, முதல் செட்டை 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 25-16 என்ற கணக்கில் கைப்பற்றி நெதர்லாந்திற்கு ஷாக் கொடுத்தது சீனா.
அதன் பின் ஆட்டதில் நாங்களும் இருக்கிறோம் என்பதைக் காட்டும் விதமாக மூன்றாவது செட்டை நெதர்லாந்து அணி 25-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றியது. இருப்பினும் சீனாவின் அதிரடி ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் நான்காவது செட்டை 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் நெதர்லாந்து அணி இழந்தது.