ஜார்கண்ட்:மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி மகுடம் சூடியது. நடப்பு சாம்பியன் ஜப்பானை 4-க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த மாதம் 27ஆம் தேதி 7வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியான ஜப்பான், சீனா, மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து, மற்றும் இந்தியா என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன.மொத்தம் 18 போட்டிகள் நடைபெற்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் மோதியது. ரவுண்ட் ரபின் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அணி விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
பின்னர் நடைபெற்ற அரை இறுதி போட்டியில் தென் கொரியா அணியை 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று (நவ. 5) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பான் அணியை, இந்திய மகளிர் எதிர்கொண்டனர்.
இந்திய மகளிர் அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கியது. போட்டியின் 17வது நிமிடத்தில் சங்கீதா முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் 46வது நிமிடத்தில் நேஹா, 57வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி, வந்தனா 60வது நிமிடம் என அடுத்தடுத்து 3 கோல்களை பதிவு செய்தனர்.
ஆட்டத்தில் முதல் 15 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யாத நிலையில், 2வது 15 நிமிடத்தில் சங்கீதா கோல் பதிவு செய்தார். 3வது கால் பாதியில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. 4வது கால் பாதியில் 3 கோல்களை இந்திய வீராங்கனைகள் போட்டனர். போட்டியின் முடிவில் இந்திய மகளிர் அணி 4-க்கு 0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
கடைசியாக, 2016 ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பட்டத்தை வென்ற இந்தியா மகளிர் அணி, அதன்பின் 7 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாக தற்போது பட்டம் வென்று உள்ளது. இதனையடுத்து இந்தியா மகளிர் அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பட்டம் வென்ற இந்திய மகளிர் அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் தலா 3 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், இந்திய மகளிர் அணியின் உதவிக் குழுவினருக்கு தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீன மகளிர் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி 3வது இடத்தை பிடித்தது.
இதையும் படிங்க:பேட், பால் உடன் விராட் கோலி மணல் சிற்பம்.. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்!