ரியோ டி ஜெனிரோவில் கடந்த மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.
கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பத்தைச் சேர்ந்த உருத்திராபதி (84), ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர். இவரது மனைவி கிருஷ்ணவேணி (74), இவர்களது மகன் வாலறிவன்-சரோஜா தம்பதியினரின் மகள் தான் இளவேனில். தற்போது இவரது பெற்றோர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்துவருகின்றனர்.
இளவேனிலுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு இந்நிலையில், சொந்த ஊரில் தனது தாத்தாவை சந்தித்து ஆசிபெற காராமணிக்குப்பத்துக்கு வருகைதந்த இளவேனிலுக்கு உறவினர்கள், ஊர் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஊர் எல்லையிலிருந்து தனது தாத்தா வீடு செல்லும்வரை இளவேனிலுக்கு ஒவ்வொரு வீடுகளிலும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஊர் இளைஞர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கம்வென்ற இளவேனிலுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
பின்னர், நமது ஈ டிவி பாரத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது,
"காராமணி குப்பத்தில் பிறந்து அகமதாபாத்தில் வளர்ந்த என்னால் தமிழ்மொழி எப்போதும் மறக்க முடியாது. விளையாட்டாக துப்பாக்கிச் சுடும் போட்டியை ஆரம்பித்து அதுவே மிகவும் பிடித்ததால் விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.
அனைவரும் குடும்பமாக இருந்து வரவேற்பு அளித்ததை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உலகக்கோப்பை போட்டியில் தங்கம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியோடு அடுத்து நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் தொடரின் இறுதிப் போட்டி, ஒலிம்பிக் ஆகியவற்றில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன்.
நான் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு எங்கள் குடும்பம்தான் ஊக்கமளித்தது. ஏனெனில் அவர்கள் என்னை எதற்கும் கட்டுப்படுத்தவில்லை. தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்ததால்தான் இந்தச் சாதனை புரிய முடிந்தது. தங்கப்பதக்கம் வென்றதும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
அப்போது, அவரது தந்தை வாலறிவன், தாத்தா உருத்திராபதி, பாட்டி கிருஷ்ணவேணி ஆகியோர் உடனிருந்தனர். டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் இளவேனில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என நம்புவோம் என அவரது ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.