தோஹா: ஆடவருக்கான உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்களான விக்ரம் மல்கோத்ரா, ரமித் தன்டோன் ஆகியோர் முதல் சுற்றிலேயே நடையைக் கட்டிய நிலையில், மற்றொரு இந்திய வீரரான சவுரவ் கோஷல் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
முதல் சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த மகேஷை 11-7, 11-7, 18-16 ஆகிய நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று 3-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதன்பின் நடைபெற்ற இரண்டாம் சுற்றில், ஃபிரான்ஸின் லூகாஸ் செர்மேவை (Lucas Serme) 11-8, 11-5, 11-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-0 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் மூன்றாவது சுற்றுப் போட்டியில் அவர் இரண்டாம் நிலை வீரர் எகிப்தின் முகமது எல்ஷோர்பாகியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் காலிறுதிச் சுற்றுவரை முன்னேறிய ஒரே இந்திய வீரர் இவர்தான். இதனால், இன்றையப் போட்டியிலும் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.