இந்திய மகளிர் குத்துச்சண்டையில் நட்சத்திர வீரராக வலம்வருபவர் மேரி கோம். மணிப்பூரைச் சேர்ந்த 36 வயதான மேரி கோம், மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்பும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறார். அந்த வகையில் இவர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார்.
இதன்மூலம் இந்தத் தொடரில் அதிக பதக்கங்கள் (6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) வென்ற நபர் என்ற சாதனையை படைத்தார். கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவர், தற்போது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வரை ஓயமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே எனது கவனம் உள்ளது. அதற்காக நான் இந்த வயதிலும் கடுமையாக முயற்சிக்கிறேன். ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்று போட்டியில் முதலிடம் பிடிக்க சற்று கடினமாக இருந்தது. உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் ஒலிம்பிக் தொடரிலும் நான் சிறப்பாக விளையாடுவதற்கு எந்தவித மந்திரமும் தந்திரமும் இல்லை. ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெறுவதற்காக கடுமையாக போராடுவேன். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வரை நான் ஓயமாட்டேன்" என்றார்.
இதையும் படிங்க:இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கைப் பயணம்!