கோயம்புத்தூர்:ஜேகே டயர் எஃப்.எம்.எஸ்.சி.ஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் 2021இன் 4ஆவது சுற்றின் இறுதிப்போட்டிகள் கோவை செட்டிபாளையம் பகுதியிலுள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நடைபெற்றது.
இதில் சென்னை, கோவை ,திருச்சூர், பெங்களூர், புனே, ஒடிசா, குஜராத் உள்ளிட்ட பல போன்ற பகுதிகளில் இருந்து முன்னனி கார் பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர். தேசிய பந்தய சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நேற்று முன்தினம் (பிப். 26) தொடங்கிய நிலையில் நேற்று (பிப். 27) இறுதி போட்டி நடைபெற்றது.
14ஆவது சாம்பியன் பட்டம்
பரபரப்பாக நடைபெற்ற எல்.ஜி.பி ஃபார்முலா-4 கார் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு வீரர்களும், தன் முன் செல்லும் வீரரின் காரினை முந்தும் முனைப்பில் வேகத்தை கூட்டிச்சீறிப்பாய்ந்தனர்.
முதல் சுற்று முதலே தனது ஆதிக்கத்தை செலுத்திய சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் 70 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையைக் கைபற்றினார். இது, விஷ்ணு பிரசாத்தின் 14ஆவது தேசிய பட்டமாகும். இரண்டாம் இடத்தை 59 புள்ளிகள் பெற்ற திருச்சூரைச் சேர்ந்த தில்ஜித் , மூன்றாம் இடத்தை கோவையைச் சேர்ந்த பாலாபிரசாத் பிடித்தனர்.