இரண்டு ஒலிம்பிக் போட்டிகளை கடப்பதே ஸ்பிரிண்டர்களுக்கு மிகப்பெரும் சவால். அப்படியே ஸ்ப்ரிண்டராக தொடர்ந்தாலும் சாதனைகளைப் படைப்பது என்பது அரிதிலும் அரிதான ஒன்று. ஆனால் ஒரு வீரர் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் தங்கப் பதக்கங்களை வாரி எடுத்துக்கொண்டு போனால்... அந்த வீரரின் பெயர் உசேன் போல்ட்டாக மட்டுமே இருக்க முடியும்.
பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு முதல் வெற்றிதான் அடுத்தடுத்த வெற்றிகளை பெற ஊக்கம் கொடுக்கும். அதேபோல்தான் உசேன் போல்ட் பெற்ற முதல் வெற்றியும் ஸ்ப்ரிண்டராக வாழ்க்கையைத் தொடர காரணமாக அமைந்தது.
200மீ ஓட்டத்தில் சாதனைப் படைத்தபோது... சரியாக 1998ஆம் ஆண்டு, ஒரு தொடக்கப் பள்ளியின் விளையாட்டு போட்டிக்கு வால்டென்சியா நகரமே கூடியது. அதில் ரிச்சர்டோ, போல்ட் இரண்டு சிறுவர்கள் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டனர். அதில் ரிச்சர்டோ சிறுவயது முதலே ஓட்டத்தில் கெட்டிக்காரர். மற்றொரு சிறுவனான போல்ட் கிரிக்கெட்டிலும், கால்பந்திலும் ஆர்வம் காட்டி வந்தவர். போல்ட் கிரிக்கெட் ஆடுகையில் பந்துவீசினால் பேட்ஸ்மேனின் ஸ்டம்புகள் தெறிக்கும் அளவிற்கு வேகமாக ஓடி வந்து பந்தை வீசக் கூடியவர். அதனைப் பார்த்த பயிற்சியாளர், போல்ட்டை தடகளத்திற்கு அழைக்கிறார். அதற்கு போல்ட் மறுக்க, நீ அந்த போட்டியில் வென்றால் நான் உனக்கு நல்ல சிக்கன் சாப்பாட்டை மதிய உணவாக கொடுக்கிறேன் என அவரை பயிற்சியாளர் தூண்டுகிறார். நல்ல மதிய உணவிற்காக போட்டியில் கலந்துகொள்வதாக ஒப்புக்கொண்ட போல்டிற்கு ஒரு பயம். ஏனென்றால் ரிச்சர்டோ - போல்ட் இருவரும் தெருக்களில் ஓட்டப்பந்தயம் ஓடியதில் பலமுறை தோல்வியடைந்தவர் போல்ட்தான். ஒவ்வொரு முறை தோல்வியடைந்தபோதும் போல்ட் மனதில் மிகப்பெரிய கோபமும் விரக்தியும் வெளிப்படும். சில நேரங்களில் கண்ணீரும் வெளிவரும்.
அப்போதுதான் அந்த போட்டி நடக்கிறது. பள்ளி விளையாட்டில் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகிறார்கள். பயிற்சியாளரின் விசில் ஊதப்படுகிறது. தெருக்களில் வேகமாக ஓடிய சிறுவன் ரிச்சர்டோ பின் தங்குகிறார். தோல்வியடைந்த போல்ட் முன்னேறுகிறார். இறுதியாக அந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்று வால்டென்சியா நகரத்தின் மிக வேகமாக ஓடும் சிறுவன் எங்கிற பெயரை போல்ட் எடுக்கிறார். போல்ட் வாழ்க்கையில் பெற்ற முதல் வெற்றிக்கு பரிசாக நல்ல சிக்கன் சாப்பாடு கிடைக்கிறது.
அதனையடுத்தும் தடகளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்ற கனவுடன்தான் போல்ட் இருக்கிறார். பின்னர் தொடக்க பள்ளியிலிருந்து மேல்நிலை பள்ளிக்கு மாறுகிறார். ஜமைக்காவின் மிகப்பெரிய பள்ளியில் ஸ்போடர்ட்ஸ் கோட்டாவில் இடம் கிடைக்கிறது. ஆனால் போல்ட்டிற்கோ, தடகளத்தில் பயிற்சிபெற விருப்பமில்லை. இதனால் பயிற்சிகளை புறக்கணிக்கிறார்.
ஹாம்ஸ்ட்ரிங்கால் பாதிக்கப்பட்டபோது... இது போல்ட்டின் தந்தைக்கு தெரியவர, அப்போது ஒரு சில வார்த்தைகளை போல்ட்டிற்கு அவரது தந்தைக் கூறுகிறார். அது, கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு, நீ சரியாக ஆடினாலும் உன் அணி தோற்கலாம். உன்னை தேர்வாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால், உன்னை தேர்வு செய்யமாட்டார்கள். அதில் அதிக அரசியல் உள்ளது. ஆனால் தடகளம் அவ்வாறு இல்லை. உன் திறமையும், உன் செயலும்தான் உன் வெற்றியை தீர்மானிக்கும். உன்னை யாரும் புறந்தள்ள முடியாது என்றார். அந்த வார்த்தைகள்தான் போல்ட்டின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.
அன்றிலிருந்து போல்ட்டின் வாழ்க்கையில் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகளுக்கான பயிற்சி நிறுத்தப்படுகிறது. முழுவதுமாக தடகளத்தில் கவனம் செலுத்துகிறார். ஆனால் மாநில அளாவிலான போட்டிகளில் கெய்த் ஸ்பென்ஸ், டேவிட் போன்ற வீரர்களிடம் எளிதாக அடைந்த தோல்வி, போல்ட்டின் மனதில் பெரும் அதிர்வுகளை உண்டாக்குகிறது. போல்ட்டை தோல்விகள் மிரட்டுகிறது. அப்போதுதான் ஒலிம்பிக் தடகள போட்டியில் சாதித்த மைக்கெல் ஜான்சன் என்ற வீரரின் 200 மீ ஒட்டத்தை 19.32 வினாடிகளில் படைத்த சாதனையைப் பார்த்து மிரள்கிறார். ஒலிம்பிக் கனவு போல்ட்டிற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
அதனையடுத்து தான் போல்ட்டின் பயிற்சிகள் மேலும் வலுப்பெறுகிறது. மீண்டும் தோல்வியடையக் கூடாது என்ற தீவிரம்தான் போல்ட்டை கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வைக்கிறது. அப்போது போல்ட்டிற்கு பயிற்சியளித்தவர் முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரர் மெக்கெல் கிரீன். 14 வயது வரை போல்ட், சொல்லிக்கொள்ளும் படியான வெற்றிகளை பெறவில்லை. அதனையடுத்து 2001ஆம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இறுது சுற்றுக்கு தகுதிபெறாமலே வெளியேறுகிறார். தொடர்ந்து தோல்விகள் அவரை துரத்துகிறது. தடகளத்தை போல்ட் சீரியஸாக எடுக்கவில்லை என விமர்சனம் எழுகிறது.
200மீ ஓட்டத்தில் சாதனைப் படைத்தபோது... அதையடுத்து 15வயதில் ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரத்திலேயே உலக ஜூனியர் சாமிப்யன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. தோல்விகளின் பயம் போல்ட்டை விட்டபாடில்லை. சொந்த ஊரில் சொந்த மக்களுக்கு முன்பு தோற்றுவிடுவோமோ என நினைத்து வீட்டின் பின்புறம் அமர்ந்து கண்ணீர்விடுகிறார். இருந்தும் தாயின் சொல்லால் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. கலந்துகொண்டு விடலாம் என களம் புகுகிறார் போல்ட்.
15வயது போல்ட் உடன் மூத்த வயதுடைய வீரர்கள் களத்தில் உள்ளனர். ஆனால் சொந்த மண்ணில் முதன்முறையாக 200மீ ஓட்டத்தை 20.61 வினாடிகளில் கடந்து தங்கத்தைக் கைப்பற்றி தன்னை உலகுக்கு அறிமுகம் செய்து கொள்கிறார். அன்று வரை 15 வயது வீரர் ஒருவர் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதில்லை. போல்ட் என்னும் சாகசக்காரன் அடைந்த முதல் வெற்றி அது.
அதையடுத்து 2003ஆம் ஆண்டு யூத் சாம்பியன்ஷிப், கரீஃப்டா கேம்ஸ் என அனைத்திலும் அசத்துகிறார். உலகின் அவுட் - ஸ்டாண்டிங் அத்லட் ஆஃப் தி இயர் (Outstanding athlete of the year) கொடுக்கப்படுகிறது. ஒரே நாளில் புகழின் உச்சிக்கு செல்கிறார். பெண்கள், போதை, கஞ்சா என தடம் மாற போல்ட்டின் நடவடிக்கைகள் கவனிக்கப்படுகிறது. எந்த அளவிற்கு கவனிக்கப்படுகிறது என்றால், நாட்டின் பிரதமரே போல்ட்டை பாதுகாக்குமாறு அறிவுறுத்தல் கொடுக்கும் அளவிற்கு போல்ட் கவனிக்கப்பட்டார்.
பின்னர் மீண்டும் போல்ட் களத்திற்கு வர, 2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் ஜமைக்கா அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்பு போல்ட்டின் பயிற்சியாளராக இருந்த பிட்ஸ் கோல்மேன் மாற்றப்பட்டு கிளென் மில்ஸ் வந்தார். ஆனால் அந்த ஒலிம்பிக் தொடரின் முதல் சுற்றோடு வெளியேற மீண்டும் தோல்விகள் போல்ட்டை பயமுறுத்தியது. அத்தோடு மட்டுமல்லாமல் உடலிலும் காலிலும் அதீத வலி தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. என்னவென்று பரிசோதிக்கையில், முதுகெலும்பு s வடிவில் உள்ளதால் இந்த வலிகள் ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக எவ்வித மருந்துகளும் எடுக்க முடியாது. ஏனென்றால் தடகள வீரர் ஒருமுறை ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினாலும் மொத்த வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது போல் தான்...
பின்னர் ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே எடுத்துக்கொள்கிறார். புதிய பயிற்சியாளரின் கீழ் பயிற்சி முறைகள் மாற்றப்படுகின்றன. அங்கிருந்து 2005ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு முற்றிலும் புதிய மனிதராக பயணம் செய்கிறார். புதிய பயிற்சி முறைகளும், பயிற்சியாளரின் ஆலோசனைகளும் போல்ட்டிற்கு உதவுகிறது. அனைத்து சுற்றுகளிலும் 21 வினாடிகளுக்கு முன் வந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறார். இந்த சாம்பியன்ஷிஒப் தொடரில் வெற்றிபெற்று ஒலிம்பிக் போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பதில் கொடுக்க வேண்டும் என நினைத்த போல்ட்டிற்கு இந்த முறை பிரச்னை வேறு வடிவில் வந்தது.
இறுதி சுற்றில் ஓடத்தொடங்குகையில், காலில் ஏற்பட்ட ஹாம்ஸ்ட்ரிங் (hamstring) பிரச்னையால் அப்போட்டியில் கடைசி இடம். 200மீ ஓட்டத்தை 26.27 வினாடிகளில் கடக்கிறார். அதனையடுத்து தான் போல்ட் என்னும் நாயகனை உருவாக்க வேலைகள் பின்புறத்தில் நடக்கிறது. பயிற்சியாளர் மில்ஸ் மற்றும் போல்ட்டின் மேனேஜர் நார்மன் இருவராலும் அதற்கு திட்டம் தீட்டப்படுகிறது. புதிய பயிற்சியாளரால் சில அறிவுரைகள் வழங்கப்படுகிறது: வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாதே. நீ உன் இலக்கை நோக்கி ஒடு, லட்சியத்தை நோக்கி பயணித்துக்கொள் என்பது தான்.
ஒலிம்பிக் தொடரின்போது உசேன் போல்ட் 200மீ ஓட்டத்தில் இருந்து பயிற்சியாளர் 400 மீ ஓட்டத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துகிறார். போல்ட் அதனை பயிற்சி செய்ய, 200மீ ஓட்டத்தில் வேகம் கூடுகிறது. அனைத்து போட்டியிலும் 20 வினாடிகளில் இலக்கை அடைகிறார். அதனையடுத்து உலக தடகளத் தொடரின் இறுதிப் போட்டியில் வெண்கலம், கிரீஸில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் வெள்ளி என போல்ட் மீது பதக்கங்களின் வெளிச்சம் பரவத் தொடங்கியது.
அதனையடுத்து தான் போல்ட்டிற்கு 100மீ ஓட்டத்தில் ஓட வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கிறது. இந்த எண்ணத்தினை தனது பயிற்சியாளரிடம் போல்ட் கூறியபோது, ஜமைக்கன் சாம்பியன்ஷிப் தொடரில்; தங்கம் வென்றால் 100 மீ ஒட்டத்தில் பங்கேற்கலாம் என அனுமதிக்கிறார். அப்போதுதான் போல்ட் என்னும் நாயகன் பதக்கங்களை கைப்பற்றுவதை விட்டு சாதனையை தனதாக்கத் தொடங்கினார்.
ஜமைக்கன் சாம்பியன்ஷிப் தொடரின் 200 மீ ஓட்டத்தில் 19.75 வினாடிகளில் கடந்து, 36 வருட சாதனையை முறியடிக்கிறார். அதனையடுத்து 2007ஆம் ஆண்டு ஜப்பான் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வெல்ல, டைசன் கே என்ற வீரர் தங்கத்தை கைப்பற்றுகிறார். அதையடுத்து 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ரோபோக் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் 100 மீ 9.72 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைக்க, லைட்னிங் போல்ட் என்னும் பட்டம் சூட்டப்படுகிறது.
அதையடுத்து தான் 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் தொடர். போல்ட்-ன் பரம எதிரியாகப் பார்க்கப்பட்ட டைசன் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட, போல்ட் அசால்ட்டாக பந்தய இலக்கை 09.69 வினாடிகளில் கடந்து சாதனையோடு கையை விரித்த படி இலக்கை அடைந்தார். உலகமே யார் இந்த போல்ட் என தேடத் தொடங்கியது. அங்கேதான் போல்ட்டின் சிக்னேச்சரான கையை வானத்தை நோக்கி உயர்த்தி மற்றொரு கையை அம்பு விடுவது போல் செய்ய, உலகத்தை போல்ட் என்னும் ப்ளாம்பாய்ண்ட் (flamboynt) வசியம் செய்து சென்றுவிட்டார்.
உலக சாதனைப் படைத்தபோது... அந்த செய்தியாளர் சந்திப்பில் டைசன் இல்லாததால் எளிதாக வென்றுவிட்டீர்கள் என விமர்சனம் வைக்க, அதே செய்தியாளர் சந்திப்பில் டைசன் கே-வை வென்றுகாட்டுகிறேன் என போல்ட் சாவல்விட்டார். சொன்னவார்த்தையை நான் என்றும் தவறவிட்டதில்லை என்பது போல், அடுத்ததாக நடைபெற்ற சாம்பியன்ஷிப் தொடரிலேயே 09-58 வினாடிகளில் உலக சாதனையுடன் டைசன் கேவை வீழ்த்தி மீடியாவின் வாயையும் அடக்கிக்காட்டினார். போல்ட் என்னும் நாயகனை உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.
அதையடுத்து நடைபெற்ற 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் ஓடிய மூன்று விதமான போட்டியிலும் வெற்றிபெற போல்ட்டை வேறு எந்த வீரராலும் வெற்றிபெற முடியாது என மக்கள் பெருமை கொள்ளத் தொடங்கினார்கள். அதிலும் யொகன் ப்ளேக்கிடம் வாயில் கையை வைத்து கெத்தாக வெற்றிபெற்ற தருணம் எல்லாம் வேறு எந்த தடகள வீரராலும் செய்ய முடியாத சம்பவங்கள்.
ஜஸ்டின் காட்லின் - உசேன் போல்ட் அதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற போல்ட்டின் மூன்றாவது ஒலிம்பிக் தொடரிலும் மூன்று தங்கம். அதையடுத்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரோடு ஓய்வை அறிவித்தார். கடைசி போட்டியில் மிகப்பெரும் வெற்றியோடு ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் நினைத்த நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜஸ்டின் காட்லின் தங்கத்தை வென்றார். ஆனால் உலகின் அதிவேக மனிதனை வென்றுவிட்டு போல்ட்டின் முன் தலைவணங்கி மரியாதை செய்தபோது, உலகும் சேர்ந்தே அவருக்கு மரியாதை செலுத்தியது.
வெறும் மதிய உணவுக்காக ஓடத் தொடங்கிய ஓட்டம், சரித்திரம் படைத்தது. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக போல்ட் செய்த சாதனைகள் இன்றுவரை வேறு எந்த வீரராலும் முறியடிக்க முடியாமல் உள்ளது. அவருக்கு பிறகு சாம்பியன் பட்டம் சூடிய அனைவரும் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். ஆனால் தொடர்ந்து 12 வருடங்களாக சாதனைகளுக்கு மேல் சாதனை, பதக்கங்களுக்கு மேல் பதக்கம் என வாகை சூடிய போல்ட் இன்று சொந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உதவி வருகிறார்.
ஜமைக்காவின் பள்ளிகளை முன்னேற்றுவதற்காக பண உதவிகளை செய்து வருகிறார். தன்னை வைத்து விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு போல்ட் கூறும் நிபந்தனைகள் ஒன்று தான். அது எனது ஊரில் மட்டுமே படமாக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் உதவி பெறுவார்கள். ஓய்வு பெற்ற பின்னரும் போல்ட் உதவி வருவது மற்ற விளையாட்டு வீரர்களிடம் இருந்து போல்ட்டை இன்னும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. பிறந்த நாள் வாழ்த்துகள் சாம்பியன்...!