நியூயார்க்:மகளிர் டென்னிஸின் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, சாதனை படைத்தவர் செரீனா வில்லியம்ஸ். இம்மாத 26ஆம் தேதி, 41 வயதை எட்டும் செரீனா வில்லியம்ஸ், டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் தெரிவித்தார். மேலும், அமெரிக்க ஓபன் தொடரே தனது கடைசி தொடராக அமையும் எனவும் கூறப்பட்டது.
மேலும், இந்தாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு சுற்றில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ், மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லாஜான்விக் உடன் இன்று (செப். 3) மோதினார்.
இப்போட்டியில், செரீனா வில்லியம்ஸ் 5-7, 7(4)-6, 1-6 என்ற செட் கணக்கில் அஜ்லாவிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம், தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இப்போட்டி அவரின் வழியனுப்பும் போட்டியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
23,859 பார்வையாளர்களின் மத்தியில் செரீனா வில்லியம்ஸ், இத்தொடரின் தனது கடைசிப்போட்டியை நிறைவுசெய்தார். போராட்ட குணத்திற்கு பேர்போன செரீனா, இப்போட்டியிலும் கடுமையான போராட்டத்தைக் காட்டியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.