டெல்லி: டோக்கியோ 2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா 1 தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என ஏழு பதக்கங்களை பெற்றது. இதில், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா வெள்ளியையும், ரவிக்குமார் தாஹியா வெண்கலமும் வென்றிருந்தனர்.
இந்நிலையில், மல்யுத்த விளையாட்டிற்கான உள்கட்டமைப்பை வளர்த்தெடுக்கவும், வீரர்களின் பயிற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வரும் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை மல்யுத்த விளையாட்டை உத்தரப் பிரதேச அரசு ஸ்பான்சர் செய்ய இருப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
ஒடிசா போல் உத்தரப் பிரதேசம்
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "ஒடிசா ஒரு சிறிய மாநிலம். அந்த மாநிலமே ஹாக்கி விளையாட்டுக்கு பெரும் அளவில் உதவிபுரியும்போது, உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தால் கண்டிப்பாக முடியும் என்பதால் மல்யுத்தத்திற்கான ஸ்பான்சர்ஷிப் குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்தை அணுகினோம். அவரும் அத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், வரும் 2024 ஒலிம்பிக் தொடர் வரை ரூ. 30 கோடியும் (வருடத்திற்கு தலா ரூ.10 கோடி); அதற்கடுத்த 2028 ஒலிம்பிக் தொடர் வரை ரூ. 60 கோடியும் (வருடத்திற்கு தலா ரூ.15 கோடி); கடைசி கட்டமாக 2032 ஒலிம்பிக் தொடர் வரை ரூ. 80 கோடியும் (வருடத்திற்கு தலா ரூ.20 கோடி) என மொத்தம் ரூ. 170 கோடி வழங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு நாங்கள் முன்மொழிவு ஒன்றை அளித்துள்ளோம்.