தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

22 மாதங்கள்... 196 நாடுகள்... புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஓயாமல் ஓடிய கால்கள் - மாரத்தான் போட்டி

தற்போதைய அவசர உலகத்தில் பிறருக்காக யோசிக்கவே யோசிக்கும் மனிதர்கள் இருக்கும் சூழலில் ஒருவரை பார்த்து அவரது புற்றுநோயின் வீரியத்தை உணர்ந்து, அதன் விழிப்புணர்வுக்காக தனது கால்கள் கொண்டு உலகத்தை சுற்றி வந்ததால் காலத்தின் நினைவுகளில் சுற்றிக்கொண்டிருப்பார் நிக் பட்டர்.

uk-man-runs-marathon-in-all-countries-of-the-world

By

Published : Nov 12, 2019, 11:53 AM IST

வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கு ஒருவர் ஆண் விரைப்பை புற்றுநோய் விழிப்புணர்வுக்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியுள்ளார்.

நிக்

இங்கிலாந்தின் டார்செட் பகுதியைச் சேர்ந்தவர் நிக் பட்டர். வங்கியாளரான இவர் தனது 11ஆவது வயதில் முதல்முறையாக மாரத்தான் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினார். அதன்பின் பணியில் இருந்துகொண்டே முழுநேர மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராக மாறினார் நிக். பொதுவாக, வாழ்க்கையில் நாம் எதேச்சையாக சந்திக்கும் சில மனிதர்களால் நமது வாழ்க்கை அர்த்துமுள்ளதாக மாறும். அதுபோலத்தான் இவரது வாழ்க்கையும் கெவின் வெப்பர் என்பவரைச் சந்தித்தபோது அர்த்தமுள்ளதாகவும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் மாறியது.

கெவின் வெப்பருடன் நிக் பட்டர்

சஹாரா பாலைவனத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியின்போது இவர், ஆண் விரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கெவின் வெப்பர் என்ற நபரைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது ஆண் விரைப்பை புற்றுநோய் குறித்து கெவின் இவரிடம் தெரிவித்த கருத்து, நிக்கின் மனதில் ஆழமாகப் பதிந்தது.

இது, இவரை புற்றுநோயை சரிசெய்ய பணம் திரட்டும் விதமாக, அனைத்து நாடுகளிலும் (196) நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற யோசனையை தூண்டியது.

இந்த மிஷனுக்காக கடந்த ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி மாரத்தான் மூலம் உலகத்தை சுற்ற ஓடத் தொடங்கிய இவரது கால்கள், நேற்றுமுன் தினம் க்ரீஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்றப்பின்தான் ஓய்வெடுக்க ஆரம்பித்துள்ளது.

சிறுவர்களுடன் நிக் பட்டர்

2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் 10வரை என இந்த 22 மாதங்களில் இவர் ஐநாவின் வரையறைப்படி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு ஆண் விரைப்பை புற்றுநோய்க்காக இதுவரை 59 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.

இதற்காக உலகத்தையே சுற்ற வரவேண்டும் என்பதற்காக இவர் 10 பாஸ்போர்ட்டுகளை விண்ணப்பித்திருந்தார். சில சமயங்களில் விசா பெறுவதற்காக இங்கிலாந்துச் சென்று 24 மணி நேரங்களிலேயே மீண்டும் அடுத்த விமானத்தை பிடித்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். இதற்காக இவர் 455 விமானங்களில் பறந்துள்ளார். -25 டிகிரி செல்சியஸ் குளிர், 59 டிகிரி செல்சியஸ் வெப்பம் என இவர் பயணிக்காத கால சூழ்நிலை இல்லை.

கடைசி மாரத்தானில் செல்ஃபி எடுத்துக்கொண்ட நிக் பட்டர்

இந்த மாரத்தான் போட்டியின்போது நாய்களிடம் கடி வாங்கி, துப்பாக்கியில் சுடப்பட்டு, கத்திமுனையில் இவரது பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு, சிறைக்கு சென்று என புற்றுநோய் விழிப்புணர்வுக்காக வாழ்வில் பல கீறல்களை சந்தித்துள்ளார். அதனால் ஏற்பட்ட நல்ல நினைவுகளையும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்த்தில் வெளியிட்டுவந்தார். தனது மாரத்தான் போட்டிக் குறித்த அப்டேட்டையும் அதில் தெரிவித்துவந்தார்.

தென் அமெரிக்காவில் உள்ள எல் சல்வேடார் நாட்டில் இவருடன் சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மாரத்தானில் பங்கேற்றனர். எரிமலை நிறைந்தப் பகுதிகளிலும், விமான ஓடுபாதையிலும், பசிபிக் தீவுகளின் கடற்கரை ஓரங்களிலும் மாரத்தான் ஓடியுள்ளார்.

க்ரீஸ் நாட்டில் கலந்துகொண்ட தனது கடைசி மாரத்தான் போட்டியில் இவருடன் கெவின் வெப்பரும் பங்கேற்றார். இருவரும் சேர்ந்து இந்த மாரத்தான் போட்டியின் எல்லைக் கோட்டை கடந்தனர். மொத்தம் 5000த்திற்கும் மேற்பட்ட மக்களுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 8,264 கிலோ மீட்டர் தூரம் நல்ல நோக்கத்திற்காக மாரத்தான் போட்டியில் ஓடி உலகத்தைச் சுற்றிவந்துள்ளார்.

நிக் பட்டர்

இதற்காக இவருக்கு அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

"உங்கள் நேரத்தை நீங்கள் மதிக்க வேண்டும். ஒரு பணியிலிருந்து ஓய்வுபெற்று சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என கருதக்கூடாது. நீங்கள் எதைச் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அதை உடனடியாக செய்ய வேண்டும்" என்கிறார் நிக் பட்டர்.

தற்போதைய அவசர உலகத்தில் பிறருக்காக யோசிக்கவே யோசிக்கும் மனிதர்கள் இருக்கும் சூழலில் ஒருவரை பார்த்து அவரது புற்றுநோயின் வீரியத்தை உணர்ந்து அதன் விழிப்புணர்வுக்காக தனது கால்கள் கொண்டு உலகத்தை சுற்றி வந்ததால் காலத்தின் நினைவுகளில் சுற்றிக்கொண்டிருப்பார் நிக் பட்டர்.

ABOUT THE AUTHOR

...view details