1880களில் இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் 1960களில் தான் ஒழுங்குபடுத்தப்பட்ட குத்துச்சண்டைப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. அதன்பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என இந்திய வீரர்கள் தங்களை வெளிப்படுத்தியதன் மூலமாக, இவ்விளையாட்டிற்கென தற்போது தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த முன்னோடிகளைப் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்...
கேப்டன் ஹவா சிங்(Captain Hawa Singh):
இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டை மற்றொரு கோணத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை கேப்டன் ஹவா சிங்கையே சாரும். இவர் இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை பயிற்சியாளர் ஜக்தீஸ் சிங்கின் மாணவரும் ஆவர். மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் ஹவா சிங், 1966, 70களில் அடுத்தடுத்து இரண்டு ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டிகளிலும் தங்கம் வென்று சாதனைப்படைத்தவர்.
மேலும், அந்த தசாப்தத்தில் ஆசியாவின் அசைக்க முடியா விரராகவும் வலம் வந்தார். அதேபோல் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிளில் தொடர்ச்சியாக 11 முறை(1960 - 1971) சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட பெருமையை பெற்றவர்.
அதன் பின் இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற கேப்டன் ஹவா சிங், அதன் பிறகு இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் மூலமாக குத்துச்சண்டை பிரிவை உருவாக்கவும் உருதுணையாக அமைந்தார். குத்துச்சண்டை விளையாட்டில் இவரின் சேவையைப் பாராட்டி இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான துரோணாச்சாரியா விருதையும் பெற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விருது வழங்கும் விழாவிற்கு 15 நாட்கள் இருந்த நிலையில் உயிரிழந்தார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான், ஹவா சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிங்கோ சிங்(Dingko Singh)
இந்தப் பட்டியளில் அடுத்த இடத்தைப் பிடித்தவர் டிங்கோ சிங். மேரிகோர் மணிப்பூரை தலைப்பு செய்திகளில் காட்டுவதற்கு முன்பே, அதற்கான விதையை விதைத்தவர் பாண்டம்வெயிட் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் தான். இவரின் வருகைக்கு பின்னரே இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டிற்கு பல வீரர்களை வரவழைக்க ஊக்கமளித்தது.
1997ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற கிங்ஸ் கோப்பை குத்துச்சண்டைப் போட்டியில் கோப்பையைக் கைப்பற்றி இந்தியாவிற்கு பெருமையைத் தேடித்தந்தார். அதன்பின் அடுத்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டிகளிலும், குத்துச்சண்டைப் பிரிவில் தங்கம் வென்று சாதனைப்படைத்தார்.
பின்னர் ஏற்பட்ட தொடர் காயம் காரணமாக குத்துச்சண்டை விளையாட்டில் அவரால் நீண்டகாலம் பயணிக்க முடியவில்லை. இருப்பினும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் 1998ஆம் ஆண்டு இந்திய அரசின் அர்ஜுனா விருதையும், 2013ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் இந்திய அரசு வழங்கி கவுரவித்தது.
விஜேந்திர சிங்(Vijender Singh)
அடுத்ததாக குத்துச்சண்டை விளையாட்டை இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சேர்த்த பெருமை விஜேந்திர சிங்கையே சாரும். ஏனெனில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டைப் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்திய ஆடவர் விஜேந்திர சிங் மட்டும் தான். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தான் இவர் வெண்கலப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்தார்.