சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில் இதன் 32ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24முதல் ஆகஸ்ட் 9வரை நடைபெறவிருந்தது.
ஆனால், உலகம் முழுவதும் கோவிட் -19 தொற்று வேகமாக பரவிவருவதால் இந்த தொடர் அடுத்தாண்டு நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி) தெரிவித்திருந்தது. வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாதுகாப்பு நலன் கருதி ஐ.ஒ.சி எடுத்த இந்த முடிவுக்கு வீரர்கள் பலரும் வரவேற்றனர்.
அதேசமயம், தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்தத் தொடர் அடுத்தாண்டு ஜூலை 23இல் தொடங்கி ஆகஸ்ட் 8இல் நிறைவடையும் என ஐ.ஒ.சி அறிவித்துள்ளது. அதேசமயம், வரும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6வரை நடைபெறவிருந்தப் பாரா ஒலிம்பிக் தொடரும் அடுத்தாண்டு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.ஒ.சி வெளியிட்ட அறிக்கையில், "ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி, டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள், ஜப்பான் அரசாங்கம் ஆகியவை கையெழுத்திட்டுள்ளன" என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:124 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி!