உலகம் முழுவது கொரோனா வைரசால் இதுவரை ஆறாயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஐரோப்பிய குத்துச்சண்டை தகுதி போட்டிகள், முதல் சுற்றோடு நிறுத்தப்பட்டது. பார்வையாளர்களின்றி நடைபெற்ற போதிலும், இந்தத் தகுதிச்சுற்று போட்டிகள் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக நிறுத்தப்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐ.ஓ.சி.) தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.ஓ.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் உலகளாவிய குத்துச்சண்டைப் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகளையும் ஒத்திவைப்பதாகவும், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள தகுதிச்சுற்றுப் போட்டிகளை மே அல்லது ஜூன் மாதங்களில் நடத்தவுள்ளதாகவும், அதுவரை வீரர்கள் அனைவரும் தங்களது சுற்றுப்பயணங்களைக் குறைத்துக்கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தாண்டு ஜூலை 24ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தகுதிச்சுற்று போட்டிகளை மே மாதத்தில் நடத்தவுள்ளதாக ஐஓசி அறிவித்துள்ள வீரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'கரோனா வைரஸை வைத்து விளையாட வேண்டாம்' - சின்ன தல ட்வீட்