23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தாரின் தோகா நகரில் நடைபெற்றுவருகிறது. அதில் பெண்கள் பிரிவின் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து கலந்துகொண்டார்.
30 வயதான கோமதி, பந்தயத்தின் தொடக்கத்தில் நிதானமாக ஓடிய கோமதி, இரண்டாம் பாதியில் மின்னலென பாய்ந்தார். இதனால் அவர் 2 நிமிடங்கள் 2 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கத்தைத் தட்டி சென்றார்.
இதுகுறித்து கோமதி பேசுகையில், ”கடைசி 150மீ மிகவும் கடினமாக இருந்தது. நான் தங்கப்பதக்கம் வென்றது பந்தயத்திற்கு பின்னர்தான் தெரிய வந்தது” என நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து சீனாவின் வாங் வெள்ளிப்பதக்கத்தையும், கஜகஸ்தானின் மார்கரிட்டா வெண்கலத்தையும் வென்றனர். மேலும், இந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கோமதி வென்றதன் மூலம் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.