லண்டன்: ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் பிரிட்டனில் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் மங்கோலியா வீராங்கனை பத்குயாக் முங்குந்துலுடன் தமிழக வீராங்கனையான வைஷாலி மோதினார். இந்த போட்டி டிராவில் முடிவுற்றது. இருப்பினும், அதிக புள்ளிகள் பெற்றவர் என்ற முறையில், வைஷாலி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மேலும் 20 லட்சம் ரூபாயையும் அவர் பரிசுத் தொகையாக வென்றுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 34வது நகர்த்தலின்போது டிரா ஆனது. சுற்றுகளின் முடிவில் 8.5 புள்ளிகள் பெற்றதால், முதலிடம் பிடித்தார் வைஷாலி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாடவும் வைஷாலி தேர்வாகியுள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில் கூறியுள்ளதாவது, “இந்த போட்டி எனது வாழ்கையில் இதுவரை கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இது ஒரு அணுபவம்” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆண்கள் பிரிவில் உலகக் கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம், அவருடைய சகோதரர் பிரக்ஞானந்தா கேண்டிடேட் தொடருக்கு தேர்வாகிய நிலையில், தற்போது வைஷாலி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.