ஆஸ்திரேலியாவின் ராயல் மெல்போர்ன் கோல்ஃப் கிளப்பில் டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஆண்டுக்கான பிரசிடென்ட்ஸ் கோப்பை கோல்ஃப் தொடரின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், அமெரிக்கா - சர்வதேச அணி மோதின. அமெரிக்க அணியின் கேப்டனாக அந்நாட்டு நட்சத்திர கோஃல்ப் வீரர் டைகர் வுட்ஸ் விளங்கினார். கோல்ஃப் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கா அல்லாத முதல் எட்டு இடத்தில் இருக்கும் மற்ற நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச அணியில் (International Team) இடம்பெற்றனர்.
தனிநபர், இரட்டையர் பிரிவு என மூன்றுநாள் வரை சர்வதேச அணி 10-8 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவை விட முன்னிலை பெற்றுருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதி நாளில், தனிநபர் சுற்றில் டைகர் வுட்ஸ் 3-2 என்ற கேம் கணக்கில் சர்வதேச அணியைச் சேர்ந்த அப்ரஹாம் அன்சரை வீழ்த்தி அசத்தினார். டைகர் வுட்ஸைத் தொடர்ந்து மற்ற அமெரிக்க வீரர்களும் தங்களது ஆட்டத்தில் எழுச்சி பெற்று அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றி கண்டனர். இறுதியில், 16-14 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க அணி, சர்வதேச அணியை வீழ்த்தி தொடர்ந்து எட்டாவது முறையாக பிரசிடென்ட்ஸ் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.