சென்னை: தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான காரணம், ரசிகர்கள் போட்டியை நேரில் காண அனுமதி உள்ளதா என்பது குறித்து அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளர் பாரத் சிங் சவுஹான் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
அப்போது, ஈடிவி பாரத் தமிழ்நாட்டின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த அனுமதி பெற எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?
பதில்: செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு பல நாடுகள் தயாராக இருந்தன. கரோனா பரவல், பயண பிரச்சினை உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டோம்.
கேள்வி: போட்டியை தமிழ்நாட்டில் நடந்த முக்கிய காரணம்?
பதில்: டெல்லி, குஜராத், ஒடிசா போன்ற மாநிலங்களும் ஒலிம்பியாட் போட்டியை நடத்த ஆர்வம் காட்டின. ஆனால் தமிழ்நாடு செஸ் பாரம்பரியம் கொண்ட மாநிலம் என்பதாலும், இந்தியாவுக்காக விளையாடுபவர்கள் அதிகமானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதாலும் இங்கே போட்டியை நடத்த முடிவு செய்தோம்.
கேள்வி: போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன?
பதில்: இது போன்ற பெரிய அளவிலான போட்டிகளை நடத்த கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகும். ஆனால் நம்மிடம் குறைந்த மாதங்களே உள்ளன.. முடிந்தவரை போட்டியை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசும் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்குகிறது.
தமிழ்நாட்டில் பல கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர் கேள்வி : ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடப்பது எவ்வளவு முக்கியத்துவமாக பார்க்கப்டுகிறது?
பதில்: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட செஸ் விளையாட்டு, தற்போது இந்தியாவுக்கே மீண்டும் திரும்புவதாக கருதுகிறேன். கிட்டத்தட்ட 190 நாடுகளில் இருந்து போட்டியில் பங்கேற்க வீரர்கள் வர இருப்பதால் சுற்றுலா துறையும் மேம்பட்டு, மக்களின் பொருளாதாரமும் உயர வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி : போட்டி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்?
பதில்: நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் செஸ் போட்டிகள் நடத்தி சிறப்பாக விளையாடும் மாணவர்களை தேர்வு செய்து, ஒலிம்பியாட் போட்டியை நேரடியாக காண அனுமதிக்க இருக்கிறோம். பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விளம்பரங்கள் செய்ய உள்ளோம். முக்கிய நகரங்களில் போட்டி டிஜிட்டல் ஸ்கிரீனிங் செய்யப்பட உள்ளது.
கேள்வி: கரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் போட்டியை நேரில் காண அனுமதி உண்டா?
பதில்: இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, கரோனா பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்கும் 600 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வீரர்கள் தங்க வைக்கப்படும் ஹோட்டல்களிலும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கேள்வி: இந்தியாவில் போட்டி நடப்பதால் நம் வீரர்களுக்கு சாதகம் என்ன ?
பதில்: போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் அதிக வீரர்கள் கலந்து கொள்ளலாம் மற்றும் அதிக பயிற்சியாளர்களை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள இயலும்...!
இவ்வாறு ஈடிவி பாரத் தமிழ்நாடு இணைய ஊடகத்தின் கேள்விகளுக்கு அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளர் பாரத் சிங் சவுஹான் பதிலளித்தார்.
இதையும் படிங்க:உலக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் கலந்துரையாடல்!