அமெரிக்கா: அமெரிக்காவின் ஓரிகன் மகாணத்தில் உள்ள யூஜின் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று அசத்தினார். 2003இல் அஞ்சு பாபி ஜார்ஜ் வென்ற வெண்கலத்திற்கு பின் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்றுக்கொடுத்து வரலாறு படைத்துள்ளார்.
இந்நிலையில், போட்டி குறித்தும், தங்கத்தை தவறவிட்டது குறித்தும் நீரஜ் பேசியதாவது,"போட்டி மிகவும் கடினமானதாக இருந்தது. சக போட்டியாளர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடியது மிகவும் சவாலானதாக இருந்தது. தங்கத்திற்கான வேட்டை தொடரும். ஆனால், நம்மால் எல்லா முறையும் தங்கம் வெல்ல முடியாது என்பதை நம்ப வேண்டும். பயற்சியில் முழு கவனத்தை செலுத்தி, என்னால் முடிந்ததை செய்வேன்.
இங்கு தட்பவெட்ப சூழல் சற்று சவாலாக இருந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என நம்பினேன். வெள்ளி வென்றது மகிழ்ச்சிதான், உலக சாம்பியன்ஷிப் நாட்டிற்காக முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்த பெருமையை நான் பெற்றுக்கொள்கிறேன்" என்றார்.