2019-ஆம் ஆண்டிற்கான புரோ கபடி தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் 72ஆவது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டம் ஆரம்பமான் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே டைட்டன்ஸ் அணி 4 புள்ளிகளை பெற்று அசத்தியது. அதன் பின் தனது புள்ளி கணக்கை தொடங்க நினைத்த தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் சரியாக சோபிக்கவில்லை. இதன் மூலம் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 18-14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.
அதன் பின் தொடர்ந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சிறிது முன்னேறத் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆனால் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் அட்டாக் மற்றும் டிஃபென்ஸ் என இரண்டு பிரிவிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன் மூலம் தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஆட்டநேர முடிவில் 35- 30 என்ற புள்ளிகள் அடிப்படையில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 29 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியது. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை ஆடிய 13 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று 27 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன் நேற்று நடைபெற்ற 70ஆவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 27-33 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.