கௌகாத்தி: 18 வயதான விஸ்வா தீனதயாளன் கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் நகருக்கு டாக்சியில் சென்றபோது ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) விபத்தில் சிக்கினார்.
83ஆவது சீனியர் தேசிய மற்றும் மாநிலங்களுக்கிடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி இன்று (ஏப்.18) நடைபெறுகிறது. இந்தத் டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக, ஏப்.18ஆம் தேதி தனது நண்பர்களுடன் விஸ்வா தீனதயாளன் டாக்சியில் ஷில்லாங் நோக்கி சென்றார்.
அவருடன் சக தோழர்கள் ரமேஷ் சந்தோஷ் குமார், அபினாஷ் பிரசன்னாஜி ஸ்ரீநிவாசன், கிஷோர் குமார் ஆகிய மூவரும் உடனிருந்தனர். இந்த நால்வரும் பயணித்த டாக்சி, உமிலி செக்போஸ்ட் அருகில் உள்ள சங்பங்லா என்ற இடத்தில் கோர விபத்தில் சிக்கியது. எதிரே வந்த 12 சக்கர சரக்கு வாகனம் டாக்சி மீது மோதியதில் டாக்சி டிரைவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
விஸ்வா மற்றும் அவரது மூன்று நண்பர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில், வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய மருத்துவ மற்றும் மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டுவருகிறது. டேபிள் டென்னிஸ் வீரரான விஸ்வா பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்கள் பெற்றுள்ளார்.
இவர் அண்ணா நகரில் உள்ள டிடி கிளப்பில் பயிற்சி பெற்றுவந்தார். இவருக்கு ராம்நாத் பிரசாத், ஜெய் பிரபு ராம் ஆகியோர் பயிற்சியாளராக செயல்பட்டுவந்தனர். விஸ்வா மிகச்சிறந்த டேபிள் டென்னிஸ் வீரராக திகழ்ந்துள்ளார். இந்நிலையில் விஸ்வாவின் திடீர் மரணத்துக்கு மேகாலயா முதல்- அமைச்சர் கான்ராட் சங்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கலில், “ரி போய் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா மரணித்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். சிறிய வயதில் பெரிய கனவுகளுடன் பயணித்தவர் அவர். அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு