மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்வர் குர்ஜார். தடகள வீரரான இவர், சமீபத்தில் வெறும் கால்களுடன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் இலக்கை 11 நொடிகளில் கடந்து அசத்தினார். இதையடுத்து, புயல் வேகத்தில் இவர் ஓடிய வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில், இவருக்கு உதவி செய்யுமாறு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கு, கிரண் ரிஜிஜூ, ‘அவரை யாராவது என்னிடம் அழைத்துவாருங்கள், அவரைத் தடகள அகாடெமியில் சேர்த்து வைக்கிறேன்’ என பதிலிளித்தார். இதைத்தொடர்ந்து, போபாலில் இருக்கும் அகாடெமியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில், ஷூ அணிந்துகொண்டு பங்கேற்ற ரமேஷ்வர் இலக்கை 12.9 விநாடிகளில் கடந்து சொதப்பினார்.
இதையடுத்து, மத்தியப் பிரதேச விளையாட்டுத்துறை அமைச்சர் ஜித்து பத்வாரி கூறுகையில், 'சமூகவலைதளங்கள் மூலமாகத்தான் ரமேஷ்வர் குறித்து தெரிந்துகொண்டேன். சோதனை ஓட்டத்தில் அவர் இலக்கை 11 விநாடிகளில் கடப்பதை தவறவிட்டார். அவருக்கு இன்னும் பயிற்சி தேவை என்பதால் ஒரு மாத காலம் இந்த அகாடெமியில் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார். அவர் டையட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.