இந்திய ஓட்டப்பந்தய தடகள வீராங்கனையான நிர்மலா ஷியோரன் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கங்களை வென்றவர். இந்நிலையில் தடகளப்போட்டிகளில் ஊக்கமருந்து சோதனை செய்யும் தடகள நேர்மை அமைப்பு (ஏஐயு) கடந்தாண்டு நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியின்போது நிர்மலாவுக்கு சோதனை மேற்கொண்டது.
ஊக்கமருந்தால் பறிபோன இந்திய தடகள வீராங்கனையின் 2 தங்கம்
இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரன் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நான்கு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அந்த சோதனையின் முடிவை தடகள நேர்மை அமைப்பு வெளியிட்டது. அந்த முடிவில் நிர்மலாவின் உடலில் ட்ரோஸ்டானோலோன், மெட்டினோலோன் ஆகிய இரண்டு ஊக்கமருந்துகள் கலந்திருந்தது உறுதியானது. இதனால் அவருக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்காலம் 2018 ஜூன் 28ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஆகஸ்ட், 2016 முதல் நவம்பர் 2018 வரையிலான நிர்மலாவின் வெற்றிகளும் தகுதியிழப்பு செய்யப்படுகிறது. இந்த ஊக்கமருந்து சோதனை முடிவால் 2018ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 400மீ ஓட்டப்பந்தயம், 4x400 தொடர் ஓட்டம் ஆகிய இரண்டு பிரிவிலும் நிர்மலா வென்ற தங்கங்களும் பறிக்கப்பட்டுள்ளன. ஊக்கமருந்து சோதனையை நிர்மலா ஷியோரன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஏஐயு தெரிவித்துள்ளது.