நாட்டில் அதிகரித்துவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று முன் தினம் (மே 17) முடிவுபெற்றது. இந்த நிலையில், மே31ஆம் தேதிவரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதில், முக்கியமாக பார்வையாளர்களின்றி விளையாட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விளையாட்டு போட்டிகள் கூடிய விரைவில் ரசிகர்களின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்படி அனைத்து வகை விளையாட்டு வீரர்களும் விளையாட்டு முகாம்களிலும், மைதானங்களிலும் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் விளையாட்டு வளாகங்கள் மற்றும் மைதானங்களில் வீரர்கள் உடற்பயிற்சி கூட்டங்கள், நீச்சல் குளத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதவில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில்,
"இந்த பயிற்சிகளை எப்போது தொடங்க வேண்டும் என்பது குறித்த கால அளவு இல்லை. இது முற்றிலும் தனிப்பட்ட வீரர்கள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளை (என்எஸ்எஃப்) சார்ந்துள்ளது. உதாரணத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் எஸ்.ஏ.ஐ பெங்களூருவில் அமைந்துள்ள விளையாட்டு வளாகத்தில் தங்கவைகப்பட்டுள்ளனர். ஒருவேளை அவர்கள் நாளை முதல் மைதானத்தில் பயிற்சியைத் தொடங்க விரும்பினால், அவர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம்" என்றார்.
அதேசமயம் வீரர்கள் மைதானங்கள் அல்லது விளையாட்டு முகாம்களில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு மருத்துவ பரிசோதனையும், கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கரோனாவால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,163 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த மேரி கோம்!