டெல்லி:கென்யத்தலைநகர் நைரோபியில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 23ஆம் தேதிவரை நடைபெற்றது.
நீளம் தாண்டுதலில் ஒரு செ.மீட்டர் வித்தியாசத்தில் ஷைலி சிங் தங்கப்பதக்கத்தை தவறவிட்டாலும், தடகளத்தில் இந்தியாவின் அடுத்த நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார்.
வெள்ளிக்கு வாழ்த்துகள்
இதற்கு, ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "ஷைலி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது நாட்டுக்கு நல்ல செய்தி. இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக நான் அவரை வாழ்த்துகிறேன்.
அவருடைய விளையாட்டு அற்புதமாக இருந்தது. அவர் ஒரு செ.மீட்டரில் தங்கப் பதக்கத்தை இழந்தார். ஆனால் அவருடைய செயல்திறன் பாராட்டத்தக்கது, அவரின் எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
யார் இந்த ஷைலி சிங்
உத்தரப்பிரதேச மாநில ஜான்சியை சேர்ந்த ஷைலி சிங் (17) தாயாருடைய கவனிப்பில் வளர்ந்துவருகிறார். அவரின் தாயார் டெய்லராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது, ஷைலி சிங் பெங்களூருவில் உள்ள அஞ்சு பாபி ஜார்ஜின் பயிற்சி அகாதமியில் பயிற்சிபெற்று வருகிறார். மேலும், அஞ்சு பாபியின் கணவரான ராபர்ட் பாபி ஜார்ஜ் தான் ஷைலி சிங்கின் பயிற்சியாளராக இருக்கிறார்.
யு-20 சாம்பியன்ஷிப்பில் இந்தியா
இந்தியா 2 வெள்ளி, 1 வெண்கலம் என மூன்று பதக்கங்களோடு இந்த உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடரை நிறைவு செய்துள்ளது.
முன்னதாக, 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும், 10,000 மீட்டர் நடை பந்தயத்தில் அமித் காத்ரி வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். 2016 சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ராவும், 2018 சாம்பியன்ஷிப்பில் ஹீமா தாஸும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: U20 CHAMPIONSHIP: 1 செ.மீட்டரில் மிஸ்ஸானது தங்கம்; கண்ணீர் விட்ட ஷைலி சிங்!