கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக அதிகரித்துள்ளது. இப்பெருந்தொற்றால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வகையில் பல்வேறு துறை பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றனர்.
அந்த வரிசையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) ஊழியர்கள் சார்பாக ரூ.76 லட்சம் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சாயின் குழு ஏ உறுப்பினர்கள் தங்களது மூன்று நாள்கள் சம்பளத்தையும், குழு பி உறுப்பினர்கள் தங்களது இரண்டு நாள்கள் சம்பளத்தையும், குழு சி உறுப்பினர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தையும் வழங்கியதன் மூலம் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.76 லட்சத்தை சாய் அளித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது நாடாளுமன்ற நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கி தனது பங்களிப்பை ஆற்றியிருந்தார்.
இதையும் படிங்க:கிரிக்கெட்டில் இளவயது ஆல்ரவுண்டர் 'கேரி சோபர்ஸ்' என்ட்ரி தந்த நாள்!