2019ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கூடைப்பந்து போட்டிகள் சீனா தலைநகரமான பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
போட்டி தொடங்கியது முதலே ஸ்பெயின் அணி வீரர் ரிக்கி ருபியோ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் விளையாடினார். அவர் தன் கைக்கு வந்த பந்துகளை எல்லாம் புள்ளிகளாக மாற்ற எதிரணி வீரர்கள் மிரண்டுபோயினர்.
இதன்மூலம் ஸ்பெயின் அணி ஆட்டநேர முடிவில் 95-75 என்ற புள்ளிகள் அடிப்படையில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ரிக்கி ருபியோ 20 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இதற்கு முன் ஸ்பெயின் அணி 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கூடைப்பந்தாட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.