ஆடவருக்கான உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்களான விக்ரம் மல்கோத்ரா, ரமித் தன்டோன் ஆகியோர் முதல் சுற்றிலேயே நடையைக் கட்டிய நிலையில், மற்றொரு இந்திய வீரரான சவுரவ் கோஷல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் போட்டியில் அவர், எகிப்து நாட்டைச் சேர்ந்த முகமது எல்ஷோர்பாகியுடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கோஷல் 6-11, 8-11, 12-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார். இதனால், 0-3 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.