டெல்லியில் கடந்த 2012 ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை (பெயர் மாற்றம்) 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக தாக்கியது. இதனால் சிகிச்சை பெற்றுவந்த நிர்பயா, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட ராம்சிங், பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 6 பேரில் 5 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறைக்குள் மர்மமான முறையில் இறந்தார். மற்ற குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் தாக்கூர் ஆகிய 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது. அவர்களை தூக்கிலிடும் தேதி நெருங்கிவிட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை டெல்லி திகார் சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.