கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 29 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல்வேறு நிறுவனங்களும், பிரபலங்களும் முன்வந்துள்ளனர். அந்த வரிசையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் குணசேகரன் இணைந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நம் நாட்டில் தற்போது நிலவுவது மிகவும் கடினமான சூழ்நிலை. குறிப்பாக தினக்கூலி, பிற மாநிலங்களில் வேலைசெய்வோருக்கு இது மிகவும் கடினமானது. இதனால் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காகவும், 25 ஆயிரம் ரூபாய் பிரதமர் தேசிய நிவாரண நிதிக்காகவும் வழங்குவதாக உறுதியளிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் விரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, சுரேஷ் ரெய்னா, கம்பீர் ஆகியோர் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை- பிசிசிஐ!