கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல லட்சம் பேர் பாதிப்படைந்தும், உயிரிழந்தும் உள்ளனர். இதனால் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் உலக வில்வித்தை கூட்டமைப்பு சார்பில் ஆன்லைன் வில்வித்தை தொடர் நடத்தப்பட்டது. இத்தொடரின் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கொலம்பியாவின் நட்சத்திர வீராங்கனை சாரா லோபஸ், நார்வேயின் ஆண்டர்ஸ் ஹாக்ஸ்டாட்டை (Anders Faugstad) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்தப் போட்டியில் சாரா லோபஸ் 146 -144 என்ற புள்ளிகள் அடிப்படையில், நூலிழையில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார். மேலும் லாக்டவுன் நாக்அவுட் தொடரின் முதல் சாம்பியன் என்ற சிறப்பையும் 20 வயதேயான சாரா லோபஸ் பெற்றுள்ளார்.
மேலும் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சாரா லோபஸ் தனக்கு கிடைத்த 1000 சுவிஸ் ஃபிராங்க் பரிசுத் தொகையை, கொலம்பியாவின் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'பாகுபலி' வசனத்திற்கு பின் 'முக்காலா முக்காபுலா' நடனம் - வார்னரின் அலப்பறைகள்