மெல்போர்ன்:இந்தியாவின் முதல் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, இன்று (ஜனவரி 19) டென்னிஸ் விளையாட்டிலிருந்து தனது ஓய்வு குறித்து அறிவித்தார். ஆறு ’கிராண்ட் ஸ்லாம்’ (Grand slam) வென்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை என்ற சிறப்பு சானியாவிற்கு உண்டு.
மேலும், பெண்கள் டென்னிஸ் அசோசியேஷனில் (WTA) டாப் 30 ரேங்கில் இடம்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் சானியாவிற்கு உண்டு. இந்நிலையில், சானியா தனது ஓய்வு குறித்த அறிவிப்பை, ஆஸ்திரேலியன் ஓபன் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் ஆரம்பச் சுற்றின் தோல்விக்குப் பிறகு, அறிவித்தார்.
வயதாகியதாக உணர்கிறேன்
இது குறித்து அவர் கூறுகையில், ”இதற்குச் சில காரணங்கள் உண்டு. இது சாதாரணமாக நான் எடுக்கும் முடிவல்ல. எனது மூன்று வயது மகனின் உடல்நலத்திலும் பெரும் பொறுப்பேற்கும் கடமையில் நான் உள்ளேன்.
இந்த முடிவை நான் தோல்வியடைந்ததால் எடுக்கவில்லை. எனக்கு வயதாகியதாக உணர்கிறேன், ஆகையால் மீள நேரம் எடுக்கும். எனது ஆற்றல் முன்புபோல் இல்லை.
நான் சந்தோஷமாக ரசித்து விளையாடும்வரை விளையாடுவேன் என்று நான் இதற்கு முன்பு சொல்லியிருக்கிறேன். ஆனால் இப்போது அவ்வளவு சந்தோஷமாக விளையாட முடியவில்லை என்று நினைக்கிறேன். இந்த சீசன் நான் விளையாடும் கடைசி சீசனாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்திய ஓபன் பேட்மிண்டன்: உலக சாம்பியனை வீழ்த்திய இளம் இந்திய வீரர்