தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#WorldAthleticsChamps: 400 மீ ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் ஆசியப் பெண் - உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோஹா

கத்தார்: தோஹாவில் நடைபெற்றுவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 400 மீ மகளிர் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற பஹ்ரைன் வீராங்கனை சல்வா எய்த் நாசர் புதிய சாதனையை படைத்துள்ளார்.

Salwa eid naser

By

Published : Oct 4, 2019, 1:24 PM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரில் பல்வேறு பிரிவிகளின் கீழ் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் நேற்று மகளிர் பிரிவில் நடைபெற்ற 400 மீ ஓட்டப்பந்தயத்தில் பஹ்ரைன் வீராங்கனை சல்வா எய்த் நாசர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். அவர் 48.14 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 400 மீ ஓட்டத்தில் அதிவேகமாக பந்தய தூரத்தைக் கடந்த மூன்றாவது வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

மகளிர் 400மீ ஓட்டத்தில் அதிவேகமாக இலக்கைக் கடந்த வீராங்கனைகளின் பட்டியலில் கிழக்கு ஜெர்மன் வீராங்கனை மரிட்டா கோச் (47.60 விநாடிகள், 1985) முதலிடத்திலும், செக்கோஸ்லோவியா வீராங்கனை ஜார்மிலா கிராடோச்வில்வோ (47.99 விநாடிகள், 1983) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

நேற்றைய பந்தயத்தில் சிறப்பாக ஓடிய பஹாமாவைச் சேர்ந்த சாவ்னே மில்லே உய்போ, கடைசி நேரத்தில் பின்தங்கியதால் அவரால் 48.37 விநாடிகளிலே இலக்கை அடைய முடிந்தது. இதனால் அவர் வெள்ளி பதக்கம் வென்றார். ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சன் 49.47 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார். மேலும் இப்போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் வேட்லின் ஜோனாதஸ், பில்லிஸ் ஃபிரான்சிஸ் ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்தனர். இதில் பில்லிஸ் ஃபிரான்சிஸ் நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 400 மீ மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஆசியப் பெண்மணி என்ற சாதனையையும் சல்வா எய்த் நாசர் படைத்துள்ளார். கடந்த 34 ஆண்டுகளில் மகளிர் பிரிவில் அதிவேமாக இலக்கை எட்டிய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். நடப்பு தொடரில் முன்னதாக 4x400 மீ கலப்பு ஓட்டப்பந்தயத்தில் சல்வா வெண்கலப்பதக்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

ABOUT THE AUTHOR

...view details