கரோனா பெருந்தொற்றுக் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் நடைபெறவிருந்த அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைக்கேப்டன் சுரேஷ் ரெய்னா, இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹீமா தாஸுடன் இன்ஸ்டாகிராம் நேர்காணல் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். இதில் ரெய்னா, உங்களது முன்மாதிரியாக யாரை நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஹீமா தாஸ், 'என்னுடைய முன்மாதிரி சச்சின் டெண்டுல்கர் தான். அவரை முதல் முதலில் சந்தித்தது இன்றும் என் நினைவில் உள்ளது. அன்று நான் அவரிடம் பேசிமுடித்த பொழுது, நான் அழுததும் நினைவில் உள்ளது. அது என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணமும் கூட. யாரும் தங்களுடைய முன்மாதிரியாக உள்ளவர்களை என்றும் மறக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் தடகள விளையாட்டானது 2018ஆம் ஆண்டிற்குப் பிறகே பிரபலமடைந்துள்ளது. ஏனெனில் ஜகார்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதின் தொடர்ச்சியாகவே, தற்போது இந்தியாவில் தடகள விளையாட்டின் பக்கம் அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்த இந்திய வீரருக்கு பந்துவீசுவதுதான் கடினம்: பட் கம்மின்ஸ்!