கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியான கம்பாளா என்றழைக்கப்படும் எருமை மாட்டுப் பந்தயம் நேற்று அம்மாநிலத்தில் உள்ள மூடபத்ரி கிராமத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஸ்ரீநிவாஸ் கவுடா என்ற 28 வயது இளைஞர், பந்தய தூரமான 142.5 மீட்டர் தூரத்தை 13.42 விநாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இதில் அவர் 100 மீட்டரைக் கடக்க வெறும் 9.55 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டார்.
இதன்மூலம் அவர் ஓட்டப்பந்தய புயல் என்றழைக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்துள்ளார். போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்துவரும் நிலையில், இந்த இளைஞரின் ஓட்டம் அதை மிஞ்சியிருக்கிறது. தொடர்ந்து ஸ்ரீநிவாஸ் கவுடா குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவத் தொடங்கின.
இதனிடையே, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் மூலம் ஸ்ரீநிவாஸ் கவுடாவுக்கு ஓட்டப்பந்தய சோதனை நடத்தப்படும் என்றும், இந்தியாவில் உள்ள திறமைமிக்க விளையாட்டு வீரர்களை தான் ஒருபோதும் தவறவிட மாட்டேன் எனவும் ட்விட்டரில் இன்று காலை அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை ஆணையத்தின் சார்பாக ஸ்ரீநிவாஸ் கவுடாவை டெல்லிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது தொடர்பான அறிவிப்பையும் ட்விட்டரில் தெரிவித்த கிரண் ரிஜிஜூ, ஸ்ரீநிவாஸ் கவுடாவிற்கு சிறந்த பயிற்சியாளர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்படும். பிரதமர் மோடியும், தானும் இந்தியாவில் உள்ள திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்டறிய தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம் என்றும் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: காதலனையும், காதலின் ரகசியத்தையும் போட்டுடைத்த ரைசா