ஹாங்சோ: 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா பதக்கப் பட்டியலில் 81 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெற்ற 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் முகமது யாகியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் கொண்ட அணி 3.01.58 மணித்துளிகளில் 400 மீட்டர் தூரத்தைக் கடந்து இந்தியாவுக்கு 18வது தங்கத்தைப் பெற்றுத் தந்தது.
கத்தார் அணி 3.02.05 மணித்துளிகளில் 400 மீட்டர் தூரத்தைக் கடந்து இரண்டாவது இடம் பிடித்தது. மூன்றாவது இடத்தை இலங்கை அணி பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றது. தொடர் ஓட்டப் பந்தய அணியைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
சென்னையில் படித்த ராஜேஷ் ரமேஷ், கடந்த 2018இல் கோவையில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட சாம்பியன்ஷிப் 400மீ தொடர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று வெண்கலம் வென்றார். அதன் பிறகு பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.
மேலும் ராஜேஷ் ரமேஷ் ரயில்வே துறையில் திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். ஆசிய விளையாட்டு 2023 போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர். பிருத்விராஜ் தொண்டைமான் ஆடவர் ட்ராப் ஷுட்டிங் பிரிவில் 4 பேர் கொண்ட குழுவுடன் தங்கம் வென்றார்.
டென்னிஸில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஷ்குவாஷ் விளையாட்டில் மகளிர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த கிஷோர் ஜென்னா கடும் போட்டியிட்டார். கடைசியில் நடப்பு சாம்பியன் 88.88 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.
இதையும் படிங்க: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியால் களைகட்டும் சென்னை… இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் வருகை!