பிரிஸ்பேன்: டென்னிஸ் விளையாட்டில் மிக முக்கிய விளையாட்டாகப் பார்க்கப்படும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஜனவரி 14ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடங்க உள்ளது. பகல் மற்றும் இரவு என இரண்டு அமர்வுகளாக நடைபெறும் இந்த போட்டி ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2024 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டியின் காலிறுதி போட்டியின் போது அவரது தசையில் சிறு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சை மற்றும் ஓய்விற்காகத் தனது தாயகத்திற்குத் திரும்பத் தயாராகி வருகிறார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், "பிரிஸ்பேன் இன்டர்நேஷனலின் காலிறுதி போட்டியில் தோல்வியடைந்த போது எனது தசையில் சிறிய பிரச்சனை ஏற்பட்டது. அது என்னை மிகவும் சோர்வடையச் செய்தது.
நான் மெல்போர்னுக்கு வந்தது எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுத்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் நான் கலந்து கொள்வதற்குத் தயாராக இல்லை. நான் எனது நாடான ஸ்பெயினுக்குத் திரும்புகிறேன். எனது மருத்துவரைச் சந்தித்து சில சிகிச்சை மற்றும் ஓய்வு பெற விரும்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் தோல்வி அடைந்த பின் அவருக்குக் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் 2023 சீசனில் எஞ்சிய ஆட்டங்களைத் தவறவிட்டார். இந்த நிலையில், இந்த வாரம் பிரிஸ்பேனுக்கு திரும்பிய அவர், டொமினிக் தீம் மற்றும் ஜேசன் குப்லரை நேர் செட்களில் தோற்கடித்தார்.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஜன.05) நடைபெற்ற ஜோர்டான் தாம்சனுக்கு எதிரான காலிறுதி போட்டியில் 7-5, 7-6, 6-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மேலும், ஸ்பெயின் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் இதுவரை 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:2024 - டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு.. ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மோதல்!