உலக பல்கலைகழகங்களுக்கான விளையாட்டு போட்டிகள் இத்தாலியின் நேப்பில்ஸ் நகரில் நடைப்பெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய தடகள வீரங்கனை டூட்டி சந்த் 11:32 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
இதன் மூலம் உலக பல்கலைக் கழக போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்தார். தங்கம் வென்று சாதனை படைத்த டூட்டி சந்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பெற்ற தங்க பதக்கத்தின் படத்தை பதிவிட்ட டூட்டி சந்த், "என்னை கீழே இழுத்தாலும் நான் மீண்டும் அதிக பலத்துடன் மேலே வருவேன்" என்ற, வாக்கியத்தையும் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் அவர் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த டூட்டி சந்த், கடந்த மே மாதம் தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்தார். அதைத் தொடர்ந்து தன்னை தனது குடும்பத்தார் ஒதுக்குவதாக டூட்டி சந்த் குற்றம்சாட்டினார். மேலும், அவர் மீது பலரும் கடும் விமர்சனங்களை தொடுத்தனர். இதற்கு பதிலடி தரும்படியாக தற்போது தங்கம் வென்றுள்ள டூட்டி சந்த், ட்விட்டரிலும் பதிலடி கொடுத்துள்ளார்.