சென்னை: புரோ கபடி லீக் தொடரின் 10வது சீசன் கடந்த 2ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், புனேரி பல்டன், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ், பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைடன்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இன்று (டிச.22) இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இப்போட்டியில் இரு அணிகளும் சரிக்கு சம்மாக விளையாடி வந்தன. முதல் பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 20-21 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கியது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி, இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியை இரண்டு முறை ஆல் அவுட் செய்தது. இதனால் பாட்னா அணியின் புள்ளி வேகமாக முன்னேறியது. முதல் பாதியில் 20 புள்ளிகள் எடுத்த தமிழ் தலைவாஸ் அணியால் இரண்டாம் பாதியில் 13 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் பாட்னா அணி 46-33 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.