கோபன்ஹேகன்: 28வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் 31 வயதுடைய இந்திய வீரர் பிரணாய் உலக தரவரிசையில் நம்பர் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான விக்டர் ஆக்சல் சென்னை, நேற்று (ஆகஸ்ட் 25) எதிர்கொண்டு விளையாடினார்.
இதில் முதல் செட்டில் தோல்வியை கண்ட பிரணாய். அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டெழுந்து அடுத்த இரு செட்டுகளை தனதாக்கி கொண்டார். 68 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் பிரணாய் 21-13, 15-21, 16-21 என்ற செட் கணக்கில் உலகில் தலை சிறந்த வீரரான விக்டர் ஆக்சல்சென்னை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். மேலும், பிரகாஷ் படுகோன், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோருக்கு பிறகு BWF உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கத்தை வென்ற 4வது இந்தியர் என்ற பெருமையை பெற்று உள்ளார். ஓட்டுமொத்தமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா, பெறப்போகும் 14வது பதக்கம் இது ஆகும்.
முன்னதாக பி.வி சிந்து தங்கம் உள்பட 5 பதக்கங்களை வென்றுள்ளார். சாய்னா நேவால் (வெள்ளி மற்றும் வெண்கலம்), கிடாம்பி ஸ்ரீகாந்த் (வெள்ளி), லக்ஷ்யா சென் (வெண்கலம்), பி.சாய் பிரனீத் (வெண்கலம்), பிரகாஷ் படுகோன் (வெண்கலம்) ஆகியோர் ஒற்றையர் பிரிவில் பதக்கங்களை வென்று உள்ளனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி கடந்த போட்டியில் வெண்கலமும், 2011ஆம் ஆண்டு பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜுவாலா குட்டா-அஷ்வினி பொன்னப்பா ஜோடியும் வெண்கலம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் இரட்டையர் பிரிவின் கால்இறுதி போட்டியில், தரவரிசையில் 2வது இடத்தில் வகிக்கும் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கை சேர்ந்த கிம் அஸ்ட்ரூப்-ஆண்டர்ஸ் ஸ்கரூப் ராஸ்முசென் ஜோடியை எதிர்கொண்டது. இதில் டென்மார்க் ஜோடி சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியை வீழ்த்தி 18–21, 19–21 என்ற கணக்கில் வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தது.
இதையும் படிங்க:உலக தடகள சாம்பியன்ஷிப்.. இறுதி சுற்றுக்கு நீரஜ் சோப்ரா முன்னேற்றம்.. 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதி!