அஜர்பைஜான்:உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் வைத்து இன்று (ஆகஸ்ட் 22) மாலை 4.30 மணிக்கு தொடங்கி உள்ளது. இதில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, நார்வேயின் மேக்னல் கார்ல்சன் உடன் மோதினார். இதில், முதல் சுற்று முடிவில் ஆட்டம் டிராவில் முடிந்தது. வெள்ளை நிறக் காய்கள் உடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, முதல் சுற்றினை 1/2 - 1/2 என்ற கணக்கில் டிரா செய்தார்.
இந்த ஆட்டம் 35வது நகர்வில் டிரா ஆனது. மேலும், நாளை மேக்னஸ் கார்ல்சன் வெள்ளை நிறக் காய்கள் உடன் ஆட்டத்தை தொடங்க உள்ளார். இதனால் அடுத்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
கார்ல்சன், ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் என்பதும், பிரக்ஞானந்தா 21 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்திய வீரராக ஜொலிப்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும், இன்றைய இறுதிப்போட்டியில் நம்பர் 1 ரேங்கிங் கார்ல்சன் உடன் பிரக்ஞானந்தா மோதுகிறார் என்பதும் ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.
முன்னதாக, டை பிரேக்கரில் 3.5 - 2.5 என்ற புள்ளிகள் முன்னிலையில் பிரக்ஞானந்தா உலகின் 2ஆம் நிலை வீரரான ஃபேபியானோவை நேற்று வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். முன்னதாக விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருந்த நிலையில், தற்போது இறுதிப் போட்டியில் கடும் முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:FIDE World Cup: புதிய சாதனை படைத்த பிரக்ஞானந்தா.. உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!