நெதர்லாந்து:டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், உலகின் சிறந்த செஸ் வீரர்கள் தங்களை சோதித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் இருந்து பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் ஆகியோரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற செஸ் போட்டியில், உலக சாம்பியன் டிங் லிரெனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.
இந்த போட்டியின் 4வது சுற்றில் டிங் லிரெனை பிரக்ஞானந்தா வென்றார். இதன் மூலம் பிரக்ஞானந்தாவின் ஃபிடே மதிப்பு 2748.3 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக திகழ்ந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக பிரக்ஞானந்தா உருவெடுத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் 2748 என்ற புள்ளிகள் உடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கறுப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியின் மூன்று சுற்றுகளை டிராவில் முடித்து, 4வது சுற்றில் டாடா ஸ்டீல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் தனது முதல் வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல், இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்ற இடத்தையும் பிடித்துள்ளார். அதேநேரம், உலக செஸ் வீரர்கள் பட்டியலில் உள்ள டிங் லிரென் கேண்டிடேட்ஸ் போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார்.
அதேபோல், அனிஷ் கிரிக்கு எதிரான போட்டியில் குகேஷ் தோல்வியைத் தழுவ, ஜோர்டன் வான் ஃபோரஸ்ட்-க்கு எதிரான ஆட்டத்தை விதித் குஜராத்தி டிராவில் முடித்துள்ளார். இதன்படி, டாடா ஸ்டீல்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், பிரக்ஞானந்தா 3வது இடத்திலும், விதித் குஜராத்தி 7வது இடத்திலும் மற்றும் குகேஷ் 10வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க:Ind Vs Afg 3rd T20 : ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?