கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அளித்த பிரத்யேக பேட்டி ஹைதராபாத்: கடந்த ஆகஸ்ட் 24 அன்று அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற ஃபிடே உலகக்கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் பிரக்ஞானந்தாவை டைபிரேக்கர் முதல் சுற்றின் முடிவில் 1-0 என்ற கணக்கில் நார்வேயின் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து டைபிரேக்கர் முறையின் இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா கடும் முயற்சியுடன் விளையாடிய நிலையில், 0.5 - 0.5 என்ற கணக்கில் நிறைவு பெற்றதால், கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். இருப்பினும், இறுதி வரை போராடிய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்தது.
இந்த நிலையில், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தனியார் ஊடகம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் பேசிய அவர், “கார்ல்சன் வெல்ல முடியாதவர் போன்று இல்லை. அவர் நிச்சயமாக வலிமையானவர். ஆனால், அவர் ஆட்டங்களில் தோல்வி அடைகிறார். கார்ல்சன் தொடர்ந்து வெற்றி பெறுகிறார் என்று நான் நினைக்கிறேன்.
அதேநேரம், அவர் பலவற்றை இழக்கவில்லை, அதனால்தான் அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலிமையானவராக இருக்கிறார். மேலும், அடிப்படையில் எல்லாவற்றிலும் அவர் வலுமிக்கவர். அப்போது எனக்கு அழுத்தம் கொடுக்கும் என நான் நினைக்கவில்லை.
அடுத்த போட்டியில் இதனை எதிர்பார்க்கிறேன், அவ்வளவுதான். இது மிகவும் முக்கியமானது என நீங்கள் நினைத்தால், அது மேலும் உங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கத் தொடங்கும். இறுதி மூன்று போட்டிகளில் நான் எப்படி விளையாடினேன் என்பதைப் போன்று விளையாட நினைக்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “எனக்கு செஸ் விளையாட்டில் சாதிப்பதற்கு நிறைய இருக்கிறது. இது ஒரு சிறிய படியே. ஆனால், இது ஒரு நல்ல நகர்வு. ஒவ்வொருவரும் மிகவும் வலிமையாக இருப்பர். யாரையும் அவ்வளவு எளிதில் எதிலும் நினைத்து விட முடியாது. இதற்கு செஸ் மட்டுமே அடிப்படையானது என கூறி விட முடியாது.
உங்களை செதுக்குவதற்கு, நீங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உங்களை தயார்படுத்த வேண்டும். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற வேண்டுமென்றால், மனம் மற்றும் உடல் ரீதியாக மிக மிக வலிமையாக இருப்பது அவசியம்” என்றார். தொடர்ந்து பேசிய பிரக்ஞானந்தா, “சென்னையில் இருக்கும்போது நான் பேட்மிண்டன் விளையாட முயற்சிப்பேன்.
போட்டி நடைபெறும்போது நான் நடப்பதற்காக செல்வேன். எந்த விளையாட்டை விளையாடினாலும் அது என்னை காயப்படுத்தாது. நான் அந்த விளையாட்டை விளையாடுவேன். எனது மன நிலையை நானே தயார்படுத்துவேன். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தயார்படுத்தல் நிலை இருக்கும். நான் விஸ்வநாதன் ஆனந்த் உடன் பலமுறை செஸ் குறித்து விவாதித்து உள்ளேன்.
பொதுவாகவே ஆனந்த் உடன் பேசும்போது நிறைய நம்பிக்கை கிடைக்கும். அதிலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சன் உடன் போராடுவதற்கு அவர் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தார்” என தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல், “பொதுவாகவே செஸ் குறித்து பொதுமக்கள் பலரும் தெரிந்து கொண்டு உள்ளனர். அதிகப்படியான மக்கள் என்னை அறிந்து உள்ளனர். ஏராளமான இளம் வீரர்கள் செஸ் விளையாடவும், அவர்களுக்கு ஸ்பான்சர்ஸ் வருவார்கள் எனவும் நான் நினைக்கிறேன். ஒரு ரசிகனாக செஸ் பிரபலமாவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:நம்பர் 1 தான் குகேஷின் இலக்கு..! கிராண்ட் மாஸ்டரின் பயிற்சியாளர் பிரத்யேக பேட்டி..