இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப உதவியுடன் கரோனா பாதிப்புக்குள்ளான நபர் அருகில் உள்ளாரா என்பதை எச்சரிக்கும் வகையில், ஆரோக்கிய சேது என்ற செயலியை(ஆப்) மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் செயல்படும் இந்த செயலி, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் செயல்படும். இந்த 'ஆரோக்கிய சேது' (Aarogya Setu) செயலி மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ்,இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு (National Disaster Management Authority) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில் புரோ கபடி லீக் தொடரின் அணியான யூ மும்பா அணியின் வீரர்கள் காணொலி மூலமாக ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அக்காணொலியை யூ மும்பா அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் செயல்பட்ட கபடி வீரர்களுக்கு, நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாம் பெருந்தொற்றை எதிர்த்து போராடி வருவது குறித்த விஷயங்களை அறிய, எங்களது கபடி வீரர்களை நம்புங்கள். மேலும் இப்பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கு என்ன உதவும் என அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற இந்திய அணி!