டெல்லி: இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, 2023ஆம் ஆண்டிற்கான உலக வில்வித்தை விருதை வென்றுள்ளார். இதன் மூலம், அவர் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்திய வீராங்கனையான ஷீத்தல் தேவி, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர். இவர் பாரா ஆசிய போட்டிகள் மற்றும் பாரா வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றதற்காக, 2023ஆம் ஆண்டின் சிறந்த வில்வித்தை வீராங்கனையாக கெளரவிக்கப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டிற்கான இந்த வில்வித்தை விருதானது, வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பு கடந்த நம்பரில் தொடங்கி, ஒரு மாத காலம் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பதிவான நிலையில், நேற்று இதன் (டிச.29) முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டின் விருதை வென்ற பயிற்சியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த வீராங்கனைகளுக்கும், வரும் பிப்ரவரி மாதம் இந்த விருது வழங்கப்படுகிறது. 16 வயதேயான மாற்றுத் திரனாளி ஷீத்தல் தேவி, இந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மற்ற விவ்வித்தை வீராங்கனைகளான அதிதி சுவாமி மற்றும் ஜோதி சுரேகா வென்னம் ஆகியோர் எவ்வித விருதையும் பெறவில்லை. இருப்பினும், இவர்கள் இருவருமே சிறப்பாகவே செயல்பட்டிருந்தனர். அதிதி சுவாமி - ஜோதி சுரேகா வென்னம் கூட்டணி 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
குறிப்பாக, ஜோதி சுரேகா வென்னம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வில்வித்தை அணியை வழிநடத்தி, மூன்று தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தவர் ஆவார்.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி விலகல்!