ஹாங்சோவ்:சீனாவின் ஹாங்சோவ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கிய இத்தொடர், வரும் 28ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதில் இந்தியாவின் சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 போர் கலந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில், 3 வது நாளன நேற்று ஈட்டி எறிதலில் எப்-64 பிரிவில் உலகச் சாம்பியனான இந்தியாவின் சுமித் அண்டில், 73.29 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியுள்ளார். இதன் மூலம், தனது முந்தைய உலக சாதனையைத் (70.83 மீட்டர்) தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மற்றொரு இந்திய வீரரான புஷ்பேந்திர சிங், ஈட்டி எறிதலில் 68.60 மீட்டர் தூரம் வீசி புதிய உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினர். தொடர்ந்து மற்ற வீரர்களான அஜித், அஜித் சிங் ஆகிய வீரர்கள் 2 மற்றும் 3வது இடத்தைப் பிடித்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான தடகள வீரர் புஷ்பேந்திர சிங், 68.60 மீட்டர் வீசியதன் மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியந்தாவின் 67.79 மீட்டர் வீசியதே அதிகபட்சமாக இருந்தது.
ஆண்களுக்கான 200 மீட்டர் T37 பிரிவில், இந்தியாவின் ஷ்ரேயன்ஷ் திரிவேதி பந்தய தூரத்தை 25.26 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். மற்றொரு போட்டியில் 200 மீட்டர் T35 பிரிவில் இந்தியாவின் நாராயண் தாக்கூர் பந்தய தூரத்தை 29.83 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இந்தியா தற்போது வரை 16 தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு பாரா விளையாட்டுப் போட்டியில் 15 தங்க பதக்கங்களை வென்றதே அதிகபட்சமாக இருந்தது. தற்போதைய நிலவரப்படி இந்திய 16 தங்கம், 20 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 68 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Net Run Rate: நெட் ரன்ரேட் என்றால் என்ன?.. எவ்வாறு கணக்கிடப்படுகிறது?