ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் இந்தியாவில் பிப். 18ஆம் தேதி முதல் பிப். 23ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. அதில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவது குறித்து இந்திய அரசு முடிவு செய்யாமல் இருந்தது. கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானைச் சேர்ந்த விளையட்டு வீரர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்கப்படவில்லை. இதேபோல் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சீன வீரர்களுக்கு விசா வழங்குவது குறித்தும் இறுதி செய்யப்படாமல் இருந்தது.
இதையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் துணைச் செயலாளர் வினோத் தோமர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவது குறித்த இரண்டு இழுபறிக்குப் பின், அவர்களுக்கு விசா வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள அனைத்து பாகிஸ்தான் மல்யுத்த வீரர்களுக்கும் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழல் பற்றி நான் விளையாட்டுத்துறை செயலாளர் ராதெ ஷ்யாமிடன் எடுத்துச் சென்றேன். அவர் அதனை உடனடியாக உள்துறை அமைச்சகத்திடம் சென்று முடிவை ஏற்படுத்தினார். இந்த முடிவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரேந்தர் பத்ரா முக்கிய காரணமாக அமைந்தார் '' என்றார்.
இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களான முகமது பிலால் (57 கிலோ), அப்துல் ரஹ்மான் (74கிலோ), தயப் ராஸா (97 கிலோ), ஜமான் அன்வர் (125 கிலோ) ஆகிய நான்கு வீரர்களுக்கும், ஒரு பயிற்சியாளர் மற்றும் ஒரு நடுவர் என மொத்தமாக ஆறு பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.