பன்னாட்டு செஸ் ஃபெடரேஷன் சார்பில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, ’ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நடைபெற்றது. இந்திய அணி சார்பில் 14 பேர் கலந்து கொண்ட இந்தப்போட்டியில், இந்தியா முதன்முதலாக தங்கப்பதக்கம் வென்றது. மேலும், இப்போட்டியில் கலந்து கொண்டோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும் ஒருவர். 15 வயதாகும் பிரக்ஞானந்தா, இந்தியாவிலேயே இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவராவார். அதோடு, உலகளவில் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் உள்ளிட்ட பல சாதனைகளைக் கொண்ட செஸ் வீரர் பிரக்ஞானந்தா, நமது ஈடிவி பாரத்திற்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியின் கேள்வி-பதில் தொகுப்பு இதோ,
முதன்முதலாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்த வெற்றியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்தருணத்தில் என்னுடைய ஸ்பான்சர், நான் பயிலும் பள்ளி, என்னுடைய பயிற்சியாளர் ரமேஷ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வென்றுள்ளது. அதில் எனக்கும் பங்கு இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
கரோனா காலத்தில் பயிற்சியை எவ்வாறு மேற்கொண்டீர்கள்?
எனது பயிற்சியாளர் ரமேஷ் தினமும் ஆன்லைன் மூலமாக எனக்கு வகுப்புகளை நடத்துவார். ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி மேற்கொண்டேன். ஊரடங்கு தொடர்ந்து இருப்பதால் எனக்கும் ஆன்லைன் வகுப்பு பழகிவிட்டது.
முதன்முதலில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலமாக நடைபெற்றுள்ளது. அந்த அனுபவம் எப்படி இருந்தது?
ஆன்லைன் போட்டி என்றாலே இணையதள சேவைதான் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். மேலும், மூன்று போட்டிகளில் இந்த பிரச்னையால்தான் இந்தியா தோல்வியடைய நேரிட்டது. அதற்கு பிறகு இப்பிரச்னையை கையாள செயலியை பதிவிறக்கம் செய்தோம். அதன் பின்னர் இணையதள சேவையில் பிரச்னை எதுவும் வரவில்லை.